Type Here to Get Search Results !

மனதை உயிரின் மேல் வைத்து தியானம் செய்வதை குண்டலினி யோகம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

0
 

எளிய முறை குண்டலினி யோகம்:

மனதை வளப்படுத்தும் பயிற்சி:

அகத்தவத்தின் மூலகமாக மன அலைச்சுழலின் வேகத்தை நுண்ணிய அலை நீளத்திற்கு கொண்டுவர முடியும். உடற்பயிற்சியானது உடல் நலத்திற்காக செய்வதை போலவே, உளப்பயிற்சியாகிய அகத்தவத்தை மனதின் மதிநுட்பத்தை பெருக்குவதற்காக செய்ய வேண்டும். அகப்பயிற்சியை யோகம், ஜபம், தொழுகை, அகநோக்குதல்(inner travel), ஆன்ம தரிசனம்,தவம், தியானம்(meditation) என பல பெயர்களில் கூறப்படுகிறது. மன அலைச்சூழலின் விரைவு எண்ணிக்கையை அகத்தவத்தின் மூலமாக தான் விரும்பியவாறு அமைத்துக் கொள்ளும் வல்லமை மனித மனதிற்கு இயல்பாகவே கிடைக்கும்.

 மனதின் அடித்தளமான காந்த ஆற்றலை உணர்ந்து,புலன்களை கடந்து நின்று, காந்த ஆற்றல் மீது மனம் செலுத்தும் போது, 14 சுழலுக்கும் கீழே மனிதன் மனமானது இறங்கும். மன அலைச்சுழல் படிப்படியாக குறையும்போது கூர்மையும், அமைதியும் அதிகரிக்கின்றன. நீண்ட காலம் தீட்டா அலையில் பழகிக் கொண்டால் நுண்மான் நுழைப்புலன் அறிவு என்ற  கூர்ந்தறிவுத் திறன் மனதிற்கு கிட்டும். எப்பொருளைப் பற்றியும் ஆராய்வதற்கு ஏற்ற மனஅலைச் சூழல்கள் இந்த மனநிலையில் சாத்தியமாகிவிடும். 

ஒரே சிந்தனையில் மனம் நீண்ட நேரம் தொடர்ந்து நிலைத்து நிற்கவும், முடிவெடுக்கவும் முடியும். மன அலைச்சுழல் படிபடியாக குறையும் போது மனதின் நிலைப்பொருளான அறிவாகி, மனமானது தரத்தில் உயர்ந்து நிற்கும். மன அலைச்சுழல் விரைவு குறையும் போது அறிவே அகக்காட்சியாகிறது. குண்டலினி யோகம் செய்யும்போது மன அலைச்சுழல் 8 முதல் 13 வரை மனமானது ஆல்பா அலை என்ற அமைதி நிலைக்கு வரும்.

 தவத்தில் ஆழ்ந்து செல்ல செல்ல மனிதனுடைய அறிவு உடலைக் கடந்து பேரியக்க மண்டல விரைவில் ஆராய்ச்சியோடு இருக்கும்போது,  மனமானது வினாடிக்கு 4 முதல் 7 சுற்றுகள் வரை  தீட்டா அலைக்கு செல்லும். மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது ஒன்று முதல் மூன்று வரை மனமானது டெல்டா அலைக்கு செல்லும். நீண்ட காலம் தவத்தில் ஆழ்ந்து நுட்பமான அலை நீளத்திற்கு மனதை கொண்டுவந்து, மனதை நிலைநிறுத்தி பழகும் போது மட்டுமே அபூர்வமான இந்த டெல்டா அலைக்கு செல்லும்.


தவத்தின் அவசியம்: 

மனமானது போதிய விழிப்புணர்வும், தெளிவும் இல்லாத காரணத்தால் அளவுக்கு மிஞ்சிய புலன் இன்ப கவர்ச்சியினால், உடல் நலத்தையும், மனநலத்தையும் கெடுத்துக் கொள்கிறது. ஆகவே சிந்தனையாற்றால் உயர்வதற்கும், மனதை சரியான நிலைக்கு கொண்டு வருவதற்கும் தவமானது மிகவும் அவசியமாகும். தவத்தின் மூலமாக மனத்தூய்மை ஏற்படுகிறது. உயர்ந்த சிந்தனைகளை தூய்மையான மனமே பெறும். நாம் சமையல் அறையில் தினந்தோறும் பாத்திரத்தை பயன்படுத்துகிறோம். அந்த பாத்திரத்தை சுத்தம் செய்தால் மட்டுமே அடுத்த நாள் அதை பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும். அதே போல தான் தவத்தின் மூலமாக மனதையும் தூய்மை செய்து தீய  எண்ணங்களை போக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


தவமும் அறமும்:

தன்னுடைய மூலத்தை உணர்ந்து, எல்லாம் வல்ல இறைவெளியாக அறிவே பேராற்றலாக உள்ளது என்பதை உணர்ந்து முழுமை பேறு அடைவதே தவம் ஆகும். இயற்கையின் பெருமைகளை உணர்ந்து, சிறப்பு மற்றும் விளைவுகளை உணர்ந்து கொள்ள மனிதனுடைய அறிவு செய்யக்கூடிய முயற்சி வெற்றி பெறுவதற்கு, மன அலைச்சுழலைக் குறைத்து நுண்ணிய அலைநீளத்தில் நிலைக்க செய்ய வேண்டும். புலன் இன்பம் மூலமாக பழக்கம், தேவை, சூழ்நிலை இவற்றால் அறிவு குறுகி நின்று, ஆர்வத்தால் செயல்படுவதே உணர்ச்சி நிலையாகும். அறிவு இந்த நிலையில் சரியான தெளிவு இல்லாமல் மயக்கத்தோடு, உணர்ச்சி வயப்பட்டு இயங்கும் போது அமையும் உடலின் இயக்க தன்மையை மாயை என கூறுகிறோம். 


சித்தர்களும், மகான்களும் ஆழ்ந்த தவத்தால் உணர்ந்த உண்மைகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். விஞ்ஞானிகளும், மெய்ஞானிகளும் அவர்களுடைய சிந்தனைகள் ஒருமுகமாக இருக்கும் போது மன அலைச்சுழலானது  குறைகிறது. அதன் காரணமாக இயற்கையின் உண்மை நிகழ்வுகள் அவர்களுக்கு புலப்படுகின்றன.


எளிய முறை குண்டலினி யோகம்:-

மனதை உயிரின் மேல் வைத்து தியானம் செய்வதை "குண்டலினி யோகம்" என்று சித்தர்கள் கூறுகிறார்கள். குண்டம் என்பது ஆற்றல் அல்லது நெருப்பாகும். அலி என்பது ஆண்,பெண் என்ற பொதுவான உயிர்த் தன்மையை குறிப்பதாகும். குண்டலினி யோகம் அந்த காலக்கட்டத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. குண்டலினி யோகத்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக்கி நமக்கு கொடுத்துள்ளார். வயதுக்கு வந்த ஆண், பெண் இருபாலரும் எளிய முறை குண்டலினி யோகத்தை கற்றுக் கொள்ளலாம். 

இக்காலத்தில் மனதை வளப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முற்காலத்தில் குண்டலியோகம் என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் குண்டலினி யோகம் மூலமாக கடினம் இல்லாமல் சுலபமாக உயிர் சக்தியை மூலாதாரத்தில் இருந்து முதுகுதண்டு வழியாக புருவமையத்திற்கு(ஆஃனை) கொண்டு செல்ல இயலும்.

அதற்கு ஒரு குருவின் மூலமாக மூலாதாரத்தில்(முதுகுதண்டு முடியும் இடம்) உள்ள குண்டலினி சக்தியை மேலே எழுப்பி புருவ மையத்திற்கு கொண்டு வந்து உணர்த்துவார். குரு தன்னுடைய தவ ஆற்றல் மூலமாக காந்தத்தை கொண்டு இரும்பை இழுப்பது போல மற்றவர்களுடைய குண்டலினி ஆற்றலை முதுகுத் தண்டு வழியாக மேலே எழுப்பி இடமாற்றி வைத்து அமைத்துவிடலாம். உலக சமுதாய சேவா சங்கத்தின் மூலமாக குண்டலினி ஆற்றலை மேலே எழுப்பும் தவத்தை கற்றுக் கொள்ள முடியும்.

 நமது உடலில் இயங்கும் உயிர்ச் சக்தியை குண்டலினி ஆற்றல் எனக் கூறப்படுகிறது. ஒருவருக்கு தன்னுடைய உயிர் சக்தியை மேலே எழுப்ப வேண்டும் என்று விரும்பினால், அவருக்கு குருவின் உதவியின் மூலமாக தீட்சை கொடுத்து, உயிர் சக்தியை மூலாதாரத்தில் இருந்து முதுகு தண்டு வழியாக மேலே ஏற்றி புருவமயத்தில் வைத்து விடலாம். புருவ மையத்தில் உயிர் சக்தியை நிலை நிறுத்தி மனதின் மூலமாக கவனிக்க வேண்டும்.

அப்படி புருவ மையத்தை தொடர்ந்து உற்று நோக்கி, கவனிக்கும்போது அங்கு ஒரு அழுத்த உணர்வு உண்டாகும். மனதை புருவமையத்தில் வைத்து தியானம் செய்யும் போது,இரண்டு, மூன்று நாட்களில் அந்த உணர்வை நன்றாக உணர முடியும். உயிர்ச் சக்தியானது நன்றாக இயங்கத் தொடங்கும். புருவ மையத்தில் மனதை வைத்து தொடர்ந்து தியானம் செய்ய செய்ய இன்பமான உணர்வை தந்து கொண்டே இருக்கும்.

புருவ மத்தியை ஆஃனை சக்கரம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். பொதுவாக புருவ மையத்தில் மனதை ஒடுக்கி பழகும் போது மனதிற்கும் உயிருக்கும் இடையே உள்ள தொடர்பை நன்கு உணர முடியும். புலன்கள் மூலமாக உயிர் விரிந்து படர்க்கை நிலையில் மனமானது இருக்கிறது. மனமானது புலன் மயக்கத்தில் குறுகி இருப்பதனால், உயிரின் பேராற்றலையும் பெருமையையும் மறந்து பொருள் கவர்ச்சியில் சிக்கி இயங்குகிறது. உயிரின் இத்தகைய மயக்க நிலையையே மாயை எனக் கூறுகிறோம். 

உயிர் மயக்க நிலையில் அடையும் மனோ நிலையை பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி,வஞ்சம் என்ற ஆறு குணங்கள் ஆகும். இந்த ஆறு குணங்களில் வயப்பட்டு செயல்படும் போது துன்பங்களே ஏற்படுகின்றன. இந்த மயக்க நிலையில் இருந்து விடுபட உயிருக்கு விழிப்பு நிலையைக் கொடுக்கக்கூடிய பயிற்சியை செய்ய வேண்டும்.

உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலையானது ஆக்கினை தவத்தின் மூலமாக கிடைக்கிறது. இந்த ஆக்கினை தவத்தின் மூலமாக புலன்களை கடந்து செல்ல கூடிய வல்லமை நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே செல்கிறது. நமது ஆன்மா புலன்கள் மூலம் செயல்படும் போது தனது சக்தியை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்சதன் மாத்திரைகள் அடைந்து அதையே தனது இன்ப, துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கிறது. இன்பமும் துன்பமும் தனது இயக்க விளைவு தான் என்று உணராமல், மயக்க நிலையில் இருந்து தெளிவு பெற்று, தனது சக்தியை சிக்கனமாக செலவிடும் பண்பு ஆன்மாவிற்கு இந்த ஆக்கினை தவத்தின் மூலமாக கிடைக்கும். 

தேவைப்படும்போது தனது ஆற்றலை செலவழிக்கவும், தேவை படாத போது ஆற்றலை செலவு செய்யாமல் சேமிக்கும் தன்மையும்,திறனும் ஆன்மாவிற்கு கிடைக்கும். மெய்ஞானம் என்ற அருள் கோவிலுக்குள் செல்லக்கூடிய வாயிலே ஆக்கினை தவமாகும். குண்டலினி சக்தியின் இயக்க விரைவு ஆக்கினை சக்கரத்தில் தியானம் செய்ய செய்ய நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும். உடல் நலம், மனநலம் நீள் ஆயுள் இவை அதிகரிக்கும், முகம் அழகு பெறும்.


கலைச்சொற்கள்:

  • ஆன்ம தரிசனம்
  • சிந்தனையாற்றல்
  •  நன்னெறிகள்
  • தொழுகை
  • மாயை
  •  மயக்கம்
  •  நெற்றிக்கண்
  •  புருவ மையம்
  •  அருட் கோயில்
  •  ஜெபம்
  • மதிநுட்பம்
  •  அகத்தவம்
  • மதிநுட்பம்
  • தியானம்
  • யோகம்

:- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Tags

Post a Comment

0 Comments